விழுப்புரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறை சீல் வைப்பு

Published: 20/04/2024 13:10 PM Updated: 20/04/2024 13:14 PM
Ads
news-banner

விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தேர்தலில் வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில், வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு சீலிடும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா தேர்தல் காவல் பார்வையாளர் திரேந்திரசிங் குஞ்சியால்  ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.

 

மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவிக்கையில், விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட திண்டிவனம் (தனி) சட்டமன்ற தொகுதி, வானூர் (தனி) சட்டமன்ற தொகுதி, விழுப்புரம் சட்டமன்ற தொகுதி, விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி, திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதி மற்றும் உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1732 வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவிற்காக பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் முன்னிலையில், 6 சட்டமன்ற தொகுதிகள் வாரியாக தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட இயந்திரங்களை எண்ணிக்கை வரிசையில் சரிபார்க்கப்பட்டு பாதுகாப்பு அறை சீலிடப்பட்டது.

 

வாக்கு எண்ணும் மையத்தில், மூன்றடுக்கு பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளும் விதமாக, 24 மணி நேரமும் சுழற்சி முறையில், 3 பிரிவாக பணிகளில் ஈடுபடவுள்ளனர். நாளொன்றுக்கு 24 எல்லை காவல் படையினர்களும், 45 தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர்களும், 3 காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் 135 விழுப்புரம் மாவட்ட காவலர்கள் என மொத்தம் 207 நபர்கள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

வாக்கு எண்ணும் மையத்தில் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடவுள்ள வேட்பாளர்கள் அல்லது முகவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை நகல் மற்றும் புகைப்படம் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் அலுவலகத்தில் இன்றே வழங்கி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களால் வழங்கப்படும் அடையாள அட்டையினை பெற்றுக்கொள்ள வேண்டும்.

மேலும், சுழற்சி முறையில் வேட்பாளர் அல்லது முகவர்கள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பினை அறிந்து கொள்ள ஏதுவாக கண்காணிப்பு கேமரா வாயிலாக கண்காணிக்கப்படும் கண்காணிப்பு மையத்திலிருந்து மட்டுமே கண்காணிப்பு பணியினை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படும்.

 

மேலும், வாக்கு எண்ணும் மையத்தில், தடையில்லா தொடர் மின் வசதியும், தீ தடுப்பு சாதனங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் வேட்பாளர்களின் முகவர்களுக்கான தினசரி வருகைப் பதிவேடுகள் மற்றும் காவலர்களுக்கான தினசரி வருகைப்பதிவேடுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இப்பதிவேட்டில் தினந்தோறும் சுழற்சி முறையில் பணியில் உள்ள காவலர்கள் மற்றும் முகவர்கள் தங்களுடைய பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்களை கட்டாயம் பதிவேட்டில் பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவேடுகள் தொடர்ந்து பராமரிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, தெரிவித்தார்.

 

இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்று முடிந்த விழுப்புரம் (தனி) நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குப்பதிவு அறிக்கை தொடர்பாக வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி, தலைமையில், தேர்தல் பொதுப்பார்வையாளர் அகிலேஷ் குமார் மிஷ்ரா, தேர்தல் காவல் பார்வையாளர் திரேந்திரசிங் குஞ்சியால், ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

 

இந்நிகழ்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலர் மு.பரமேஸ்வரி, திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷு நிகம் விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் காஜா சாகுல் ஹமீது, மாவட்ட ஆட்சியரின்

நேர்முக உதவியாளர் தமிழரசன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் பரிதி, உதவி செயற்பொறியாளர் பாலாஜி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.