திருவண்ணாமலை மாநகரில் போக்குவரத்து
நெரிசலை குறைக்க 2.5 கி.மீ நீளத்திற்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படும் என பொதுப்பணித்துறை
அமைச்சர் எ.வ.வேலு தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளார்.
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின்
திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு
போட்டியிடுகிறார்.
சட்டமன்ற தேர்தல் 2026 தேர்தல்
வாக்குறுதிகளை பொதுப்பணித்துறை அமைச்சரும் திமுக வேட்பாளருமான எ.வ.வேலு வெளியிட்டார்.
அதன்படி திருவண்ணாமலை சட்டமன்ற
தொகுதியில் திமுக வெற்றி பெற்று தமிழகத்தில் திராவிடல் 2.0 ஆட்சி அமைந்தவுடன் திருவண்ணாமலை
சட்டமன்ற தொகுதியில் கீழ்கண்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்.
நமது தூய்மை அருணையின் சார்பாக
திருவண்ணாமலை ஜெரியாட்ரிக் மெடிசன் மருத்துவ வசதி, பொழுதுபோக்கு இடம், உடற்பயிற்சி
கூடம் ஆகிய வசதிகளுடன் கூடிய முதியோர்களுக்கான இலவச நவீன அன்பு இல்லம் கட்டப்படும்.
மகளிர் மற்றும் இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறும் வகையில் ராணுவம் மற்றும் காவல் துறையில்
சேர்வதற்கு இலவச பயிற்சி வழங்கப்படும். உயர்தர கால்நடை மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்.
மாணவர்கள் யூபிஎஸ்சி டிஎன்பிஎஸ்சி ஆர்ஆர்பி மற்றும் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற
சர்வதேச தரத்தில் பொது நூலகம் அமைக்கப்படும். திருவண்ணாமலை நகரில் உள்ள அனைத்து பூங்காக்களும்
நவீன முறையில் சீரமைக்கப்படும். மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், உள்ளூர்
மக்களின் பாதுகாப்பான பயணத்திற்கு 2.5 கிலோமீட்டர் நீளத்துக்கு உயர்மட்ட சாலை மேம்பாலம்
அமைக்கப்படும். கிரிவலப் பாதையில் நெரிசலை குறைத்து பாதுகாப்பான நடை பயணம் மேற்கொள்ளக்கூடிய
வகையில் தனியாக நடைபாதை அமைக்கப்படும். திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு
இடையூறு இல்லாமல் செல்ல அவலூர்பேட்டை சாலையில் புதிய ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும்.
மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு வேலூர் சாலை மற்றும் செங்கம் சாலையை இணைத்து
புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரை,
திருவண்ணாமலை முதல் வேலூர் வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்த
நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சரும், திமுக வேட்பாளரும் எ.வ.வேலு
திராவிட மாடல் 2.0 தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.