திருவண்ணாமலை - சென்னை பீச் மெமு விரைவு ரயிலில் கூடுதல் பெட்டிகள், தண்ணீர் வசதியுடன் கூடிய கழிவறை வசதி தேவை

Published: 05/05/2024 12:42 PM Updated: 05/05/2024 12:42 PM
Ads
news-banner

திருவண்ணாமலையில் இருந்து வேலூர்-அரக்கோணம் வழியாக சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் விரைவு மின்சார ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும்.  மேலும் காலை நேரத்தில் திருவண்ணாமலையில் இருந்து ரயில் இயக்க வேண்டும் என்று பக்தர்களும்,  பயணிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.

 

நினைத்தாலே முக்தி தரும் அண்ணாமலையார் வீற்றிருக்கும் திருவண்ணாமலையில் இருந்து தினமும் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு  வேலூர், காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக சென்னை கடற்கரை வரை விரைவு மெமு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.  இந்த ரயில் திருவண்ணாமலையில் அதிகாலை 4 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு காலை 10 மணிக்கு சென்று சேருகிறது.  மொத்தம் 224 கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டி உள்ளது. கட்டணம் ரூ. 50  மட்டுமே. அதேநேரம் இந்த ரயிலில் வெறும் 8 பெட்டிகள் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது.

 போதுமான கழிவறை வசதிகளும் இதில் இல்லை. பெயருக்கு கழிவறை இருந்தாலும் அதில் தண்ணீர் வசதி இல்லாமல் பிச்சைக்காரர்கள் மட்டுமே பயன்படுத்தும் கழிவறையாக உள்ளது.

 

மே 1ம் தேதி வரை சென்னை கடற்கரையிலிருந்து வேலூர் கண்டோன்மென்ட் வரை இயக்கப்பட்ட ரயில் மே 2 ம்  தேதியில் இருந்து திருவண்ணாமலை வரை தினசரி ரயிலாக நீட்டிக்கப்பட்டுள்ளது. இது பயணிகளுக்கும், பக்தர்களுக்கும் வரப் பிரசாதமாக அமைந்தாலும் ரயில்வே நிர்வாகத்திற்கு பயணிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

 

 இது குறித்து அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க முன்னாள் பொதுச்செயலாளர் ரகுநாதன் கூறியதாவது:

திருவண்ணாமலை வரை நீட்டிக்கப்பட்டுள்ள மெமு ரயில் உத்தரபிரதேச மாநிலம் கபூர்தலாவில் தயாரிக்கப்பட்டது. அதில் 8  பெட்டிகள் மட்டுமே உள்ளது.

 

நவீன வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள மெமு ரயிலில் கழிவறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.  குறிப்பாக புதுச்சேரியில் இருந்து திருப்பதி வரை இயக்கப்படும் மெமு ரயில் போன்று திருவண்ணாமலைக்கு ரயில் இயக்க வேண்டும்.

 

 புதுச்சேரியில் இருந்து இயக்கப்படும் ரயில் பெட்டியின் நீளம் சற்று அதிகமாக உள்ளது.  பயணிகளுக்கும் போதிய இடவசதி உள்ளது . அதேபோன்று திருவண்ணாமலை ரயிலையும் நவீன வகை மெமு எக்ஸ்பிரஸ் ரயிலாக மாற்றி இயக்க வேண்டும்.

 

 குறிப்பாக 12 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கினால் பயணிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும்.  ஏற்கனவே வேலூர் கண்டோன்மெண்டில் இருந்து சென்னை கடற்கரைக்கு இயக்கப்படும் விரைவு மின்சார ரயில் நிற்பதற்கு கூட இடமில்லாமல் பயணிகள் கடும் கூட்ட நெரிசலில் சென்று வருகின்றனர்.  இப்போது திருவண்ணாமலையில் இருந்து இயக்கப்படுவதால் பயணிகள் நெரிசல் மேலும் அதிகமாக உள்ளது.

 

 எனவே பயணிகளின் நலன் கருதி கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்.  திருவண்ணாமலையில் இருந்து சென்னை கடற்கரைக்கு 6 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்யும்போது வயதானவர்கள், பெண்கள் ,குழந்தைகள் கழிவறை வசதி இல்லாமல் தவிக்கும் பரிதாப நிலை உள்ளது.

 

 அது மட்டும் இன்றி திருவண்ணாமலைக்கு ரயில் இரவு 12 மணிக்கு சென்று சேரும்போது திருடர்கள் தொல்லையும் உள்ளது.  எனவே இந்த ரயிலில் போலீஸ் பாதுகாப்பு பணிக்கு செல்ல வேண்டும் . 

 

மேலும் திருவண்ணாமலையிலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் வகையில் கூடுதலாக இன்னொரு ரயிலையும் இயக்கினால் திருவண்ணாமலை மக்கள் மட்டும் இன்றி காட்பாடியில் இருந்து வரும் பயணிகளுக்கும் அரக்கோணத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கும் கூடுதலாக ஒரு ரயில் கிடைக்கும். 

 

அது மட்டுமன்றி அரக்கோணத்தில் இருந்து சென்னை கடற்கரை வரை பல்வேறு ஸ்டேஷன்களில் நிறுத்தப்படுகிறது. அரக்கோணத்தில் இருந்து இன்னும் சில ஸ்டேஷன்களில் நிறுத்துவதை தவிர்த்து வேகமாக இயக்கினால் பயணிகளின் பயண நேரம் குறையும்.  ஏனெனில் அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு குறித்த நேரங்களில் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது என்றார்.