அரக்கோணம் ரயில்களில் நூதன முறையில் ஆந்திர மாநிலத்திற்கு கடத்த முயன்ற 2,100 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Published: 09/05/2024 14:17 PM Updated: 09/05/2024 14:17 PM
Ads
news-banner

 

அரக்கோணம் ரயில் நிலையத்தில் ஆந்திர மாநிலத்துக்கு ரயில்களில் நூதன முறையில் கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை மாவட்ட வழங்கல் அலுவலர் பறிமுதல் செய்தார்.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரயில் நிலையத்திலிருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரேஷன் அரிசி அதிகளவில்  கடத்தப்படுகிறது. அது மட்டுமின்றி சென்னை மற்றும் அரக்கோணத்தில் இருந்து திருப்பதி செல்லும் ரயில்களில் ஆந்திராவுக்கு அரிசி கடத்தப்படுகிறது என்று தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதிக்கு புகார் சென்றது.

 

ஆட்சியர் உத்தரவின் பேரில் மாவட்ட வழங்கல்  அலுவலர் ஏகாம்பரம்,  மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் நடராஜன் ஆகியோர்  அரக்கோணம் ரயில் நிலையம் 4 வது நடைமேடையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். 

 

அப்போது அரக்கோணத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கடப்பாவுக்கு செல்லும் மின்சார ரயிலில் கடத்துவதற்காக பிளாட்பாரத்தில் பதுக்கி வைத்திருந்த அரிசி மூட்டைகளை வழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

 

இது குறித்து மாவட்ட பறக்கும் படை வட்டாட்சியர் நடராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:

 

புதுச்சேரியில் இருந்து அரக்கோணம் வழியாக திருப்பதிக்கு மின்சார ரயில் இயக்கப்படுகிறது.  இந்த ரயிலில் உள்ள கழிவறைகளில் அரிசி மூட்டைகளை போட்டுவிட்டு  ஒரு நபர் உள்ளே சென்று தாழ்ப்பாள் போட்டுக்கொண்டு  ஆள் இருப்பது போன்று பூட்டி கொள்கின்றனர்.

 

 அரக்கோணம் ஸ்டேஷனை ரயில் தாண்டும் வரை பாத்ரூம் கதவுகளை திறப்பதில்லை.  பார்ப்பதற்கு பாத்ரூமில் ஆள் இருப்பது போன்றே தெரியும் . அரக்கோணம் ரயில் நிலையத்தை தாண்டியதும் பாத்ரூம் கதவை திறந்து கொண்டு அரிசி கடத்துபவர்கள் வெளியே வருகின்றனர்.

 

அது மட்டும் இன்றி ரயிலின் சீட்டுக்கு அடியிலும் அரிசி மூட்டைகளை பதுக்கி வைக்கின்றனர்.  குறிப்பாக அரக்கோணத்தில் இருந்து கடப்பாவுக்கு காலை 7.10 மணிக்கு  மின்சார ரயில் புறப்படுகிறது.

 

 இந்த ரயில் அரக்கோணம் யார்டில் இருந்து அதிகாலை நேரத்தில் புறப்பட்டு அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு எடுத்து வந்து நிறுத்தப்படுகிறது.   யார்டில் இருந்து ரயில் புறப்படும்  போதே அரிசி மூட்டைகளை பாத்ரூம் மற்றும்  ரயிலின் சீட்டுக்கு கீழே  கடத்தல் காரர்கள் போட்டு விடுகின்றனர்.

 

 அதன் பிறகு ரயில் செல்லும் போது சாதாரண பயணி போன்று அரிசி மூட்டைகளுடன் பயணிக்கின்றனர் .

 

அதிகாரிகள் ரயிலில் ஏறி பறிமுதல் செய்யும்போது அரிசி மூட்டைக்கும் அவர்களுக்கும் சம்பந்தமே இல்லாத போல் இருக்கின்றனர்.  இப்படியாக நூதன முறையில் ரயிலில் அரிசி கடத்துகின்றனர்.

 

 மேலும் அரக்கோணத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு பெண்கள் சிலர் சென்று அரிசியை கிலோ ரூ. 4 முதல் ரூ.5 க்கு   வாங்கி சென்று ஆந்திர மாநிலத்தில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

 

 இப்படியாக அரிசி கடத்தல் நடக்கிறது.  நாங்கள் தொடர்ந்து சோதனை நடத்தி அரிசி கடத்தலை தடுத்து அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து நுகர் பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைக்கிறோம்.

 

 அரக்கோணத்தில் கடந்த 2  நாட்களாக நடத்திய சோதனையில் 2,200 கிலோ ரேஷன் அரிசியை  பறிமுதல் செய்து தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக குடோனில் ஒப்படைத்துள்ளோம் என்று பறக்கும் படை வட்டாட்சியர் நடராஜன் தெரிவித்தார்.