திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்

Published: 28/03/2024 11:31 AM Updated: 28/03/2024 11:44 AM
Ads
news-banner

 

அரக்கோணத்தில் இரும்பு எஃகு தொழிற்சாலை மூடப்பட்டதால் இங்கு மிகப் பெரிய தொழிற்சாலை கொண்டுவரப்பட்டு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கி தரப்படும் என்று அரக்கோணத்தில் அமைச்சர் உதயநிதிஸ்டாலின் பேசினார்.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பழைய பேருந்து நிலையத்தில்,

அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிக்கு அரக்கோணம் திமுக நகர செயலாளர் ஜோதி தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணையன்,  ஒன்றிய செயலாளர்கள் தமிழ்ச்செல்வன் , பசுபதி,  வடிவேலு முன்னிலை வகித்தனர்.  நகர அவைத் தலைவர் துரை சீனிவாசன் வரவேற்றார் . சிறப்பு அழைப்பாளராக கைத்தறி துறை அமைச்சர் காந்தி கலந்து கொண்டார்.


வேட்பாளர் ஜெகத்ரட்சகனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி பேசியது: 


ஐந்து நாட்களாக தொடர்ந்து நான் தேர்தல்  பிரச்சாரம் செய்து வருகிறேன் .அதனால் எனக்கு தொண்டை கட்டி இருக்கிறது.  நான் நல்லா இருக்கிறேனா என்று கேட்க மாட்டீர்களா ?  வேட்பாளர் ஜெகத்ரட்சகனின் வெற்றி 100 சதவீதம் இல்ல ஆயிரம் சதவீதம் உறுதியாகிவிட்டது.  தேர்தல் நாளில் உதயசூரியனுக்கு நீங்கள் போடும் ஓட்டு மோடி தலையில் கொட்டும் கொட்டு.

 

கடந்த தேர்தலில் ஜெகத்ரட்சகன் 3 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இது போதாது . இந்த தேர்தலில் 5  லட்சம் வாக்குகள்  பெற்று வெற்றி பெற வேண்டும்.

 மாதத்திற்கு 2  முறை நான் இந்த தொகுதிக்கு  ஜெகத்ரட்சகனுடன் சேர்ந்து வந்து பாராளுமன்ற தொகுதிக்கு என்னென்ன தேவை என்று அனைத்தையும் செய்து தருவேன்.  இது நான் உங்களுக்கு தரும்  வாக்குறுதி . நான் என்னுடைய வாக்குறுதியை காப்பாற்றுவேன்.  உங்களுடைய வாக்குறுதியை நீங்கள் காப்பாற்ற வேண்டும்.

 நிச்சயமாக உங்களின் வாக்குறுதியை  நம்பலாமா?

 

அரக்கோணம் அரசு மருத்துவமனையில் 60 லட்சம் மதிப்பீட்டில் கண் அறுவை சிகிச்சை அரங்கம் கட்டித் தரப்பட்டுள்ளது. 

தண்டலம், தணிகை போளூர் ,மோசூர்,  கீழ் வெங்கடாபுரம்,  மேல்பாக்கம் ,வேலூர் பேட்டை , ராஜபாளையம் உளியம்பாக்கம், அன்வர்த்திகான்பேட்டை  உள்ளிட்ட 18 பள்ளிகள் 6 கோடி மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

அரக்கோணம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருத்தணி செல்லும் வழியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதை அகற்றப்பட்டு போக்குவரத்துக்காக இருவழிப்பாதை ஏற்படுத்தப்படும். அரக்கோணத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி கட்டித் தரப்படும்.

 

அரக்கோணம் அடுத்த இச்சிப்புத்தூர் ரயில் நிலையத்தில் சென்னையில் இருந்து வரும் மின்சார ரயில்கள் மாணவர்களின் நலன் கருதி  காலை, மாலை நேரத்தில்  அங்கு நிறுத்தப்படும்.

 

நெமிலியில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா,  கருவூலம் மற்றும் நீதிமன்றம் அமைக்கப்படும்.  சேந்தமங்கலத்தில் ரயில் நிலையம் அமைக்கப்படும்.  கீழ் வெங்கடாபுரம், சயனபுரம் ,மாங்காட்டு சேரி , கடம்பநல்லூர் உள்ளிட்ட பகுதியில் குடிநீர் பிரச்சினை தீர்க்க ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும்.  அரக்கோணம் _ ஓச்சேரி சாலையில் நெமிலியில்  பைபாஸ் சாலை அமைக்கப்படும்.  அரக்கோணத்தில் இரும்பு எஃகு தொழிற்சாலை  மூடப்பட்டதால் இங்கு பெரிய தொழிற்சாலை கொண்டு வந்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கி தரப்படும். நெமிலி பேரூராட்சியில்  காவிரி கூட்டுக்குடிநீர்த்திட்டம் செயல்படுத்தப்படும்.

 

பாஜகவும் ,அதிமுகவும் கள்ளக்காதல் வைத்துள்ளது.  அதனால் தான் ஒன்றிய பிரதமர் மோடியை விமர்சித்தால் பாதம் தாங்கி பழனிச்சாமிக்கு கோபம் வருகிறது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் இளைஞர் அணி தம்பிமார்கள் 100 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டும் . தேர்தல் நாளில் வெற்றிச்சின்னம் உதயசூரியன்,  வேட்பாளர் ஜெகத்ரட்சகன் பெயர் மட்டுமே வாக்காளர்களுக்கு தெரிய வேண்டும்.

 இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் அரக்கோணத்தில் பேசினார். தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் 1,000க்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.