மருத்துவ மாணவர்கள் குறிக்கோளுடன் செயல்பட்டு வெற்றி பெற வேண்டும்

Published: 16/10/2024 15:26 PM Updated: 16/10/2024 15:26 PM
Ads
news-banner
அருணை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில்
மருத்துவ மாணவர்கள் குறிக்கோளுடன் செயல்பட்டு வெற்றி பெற
வேண்டும் என தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை
வேந்தர் சிறப்புரையாற்றினார்.
திருவண்ணாமலை அருணை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில்
2024-ம் ஆண்டு புதிய மருத்துவ மாணவர்களுக்கான வெள்ளை அங்கி
அணிவித்தல் மற்றும் மருத்துவ உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நேற்று 
நடைபெற்றது. 
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இயக்குனர் டாக்டர் எ.வ.வே.கம்பன்
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர்
குணசிங், கண்காணிப்பாளர்கள் டாக்டர் குப்புராஜ், சிவக்குமார்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மருத்துவமனை இயக்குனர் டென்சிங் அனைவரையும் வரவேற்று
பேசினார்.
தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர்
கே.நாராயணசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு
குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றியதாவது:-
ஜீவா வேலு கல்வி குழுமத்தில் உள்ள மருத்துவ பேராசிரியர்கள் மருத்துவ
சேவைகளை சிறப்பாக செய்து வருகிறார்கள். தங்கள் பிள்ளைகள்
மருத்துவர்களாக வர வேண்டும் என்ற பெற்றோரின் கனவு நிறைவேறி
உள்ளதாகவும் கூறினார். இதனை கருத்தில் கொண்டு மாணவர்கள்
சிறப்பாக படித்து மருத்துவர்களாக வளம் பெற வேண்டும் என்றும், மனித

சமுதாயத்திற்கு மருத்துவ சேவை பயனுள்ளதாக அமைய வேண்டும்
என்றும் கூறினார்.

அருணை மருத்துவக் கல்லூரியில் கைதேர்ந்த பேராசிரியர்கள் தங்களுக்கு
பாடங்களை கற்றுத் தர தயாராக உள்ளனர் அதனை மாணவர்கள்
பயன்படுத்தி கடின உழைப்பின் மூலம் சாதிக்க வேண்டும் என்றார்.
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை இருந்தால் வெற்றி நிச்சயம் என்றும்
கூறினார்.
ஒவ்வொரு மாணவர்களும் குறிக்கோளுடன் செயல்பட்டு வெற்றி பெற
வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தற்போது உள்ள மாணவர்கள் தொழில்நுட்பம் மிகுந்த மாணவர்களாக
உள்ளதால் பேராசிரியர்களும், மாணவர்களுக்கு ஏற்றார்போல
பாடங்களை சிறப்பாக நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர்,
மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தாமல் பல்வேறு
விளையாட்டுக்கள், பாடல்கள், நடனம் போன்றவைகளிலும் கவனம்
செலுத்த வேண்டும் என்றார்.
மாணவர்கள் குழுக்களாக இணைந்து கலந்துரையாடி பாடங்களில் உள்ள
சந்தேகங்களை தீர்த்துக்கொண்டு முழுமையாக படிக்க வேண்டும்.
அதேபோல் முடியாது என்ற வார்த்தையை மறந்து அனைத்திலும் முயற்சி
செய்து வெற்றி பெற வேண்டும் என்றார். ஆரம்பம் முதலே ஆராய்ச்சி
படிப்பில் ஈடுபட்டால் மருத்துவத்துறையில் சிறந்த
ஆராய்ச்சியாளர்களாகவும் சிறந்து விளங்கலாம் என்றார்.
முன்னதாக மருத்துவ மாணவர்கள் அனைவரும் உறுதி மொழியினை
ஏற்று கொண்டனர்.
மேலும் தமிழ்நாடு அளவில் பல்கலைக்கழகத்தில் 3-ம் இடம் பிடித்த
அருணை மருத்துவக்கல்லூரியின் 3-ம் ஆண்டு மாணவி மோனிகாவிற்கு
நினைவு பரிசு மற்றும் ரூ.1 லட்சம் பொற்கிழி கல்லூரி நிர்வாகம் சார்பில்
வழங்கப்பட்டது. அதேபோல் பல்கலைக்கழக அளவில் சிறந்த
மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நினைவு பாிசும்
வழங்கப்பட்டது.