ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு – அமைச்சர் எ.வ.வேலு தீவிர பிரச்சாரம்

Published: 17/04/2026 16:09 PM Updated: 17/04/2026 16:09 PM
Ads
news-banner

📍 திருப்பத்தூர் | ஏப்.18

ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கவிதா தண்டபாணியை ஆதரித்து, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஜோலார்பேட்டை அருகே கடை தெரு மற்றும் நாட்றம்பள்ளி ஒன்றியத்தின் நாயணசெருவு பகுதியில் தீவிரமாக வாக்கு சேகரிப்பு பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தின் போது அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:

இந்த ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களின் இல்லங்களை சென்றடைந்து வருகின்றன. புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் மாணவிகளுக்கும், தமிழ்புதல்வன் திட்டத்தின் மூலம் மாணவர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்படுகிறது. அதேபோல், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கி வருகிறார்.

மேலும் திமுக ஆட்சி மீண்டும் அமைந்தால், இந்த உதவி தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்றும், பெண்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த கூப்பன் மூலம் பிரிட்ஜ், கிரைண்டர், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை எந்த கடையிலும் வாங்க முடியும் என்றார்.

அதிமுக வேட்பாளரை விமர்சித்த அமைச்சர், “மணலை கயிறாக திரிப்பது போலவும், வானத்தை வில்லாக மாற்றுவது போலவும் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வருகிறார்” என குற்றம் சாட்டினார்.

மேலும், அதிமுக ஆட்சியில் 58 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இலவச பேருந்து பயணம் வழங்கப்படும் என கூறியும் அதை நிறைவேற்றவில்லை என்றார். ஆனால் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்து பெண்களுக்கும் இலவச பேருந்து பயண திட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்றும் குறிப்பிட்டார்.

செல்போன் வழங்குவதாகவும் வாக்குறுதி அளித்து அதை நிறைவேற்றவில்லை என்றும், விலைவாசி உயர்வுக்கு மத்திய அரசின் ஜி.எஸ்.டி. வரியும், எடப்பாடி பழனிசாமியும் காரணம் என அவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் ஜோலார்பேட்டை நகர கழக செயலாளர் அன்பழகன், நகர மன்ற தலைவர் காவியா விக்டர், ஒன்றிய செயலாளர்கள் சதீஷ்குமார், உமா கண்ணுரங்கம், சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.