📍 திருப்பத்தூர் | ஏப்.18
திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நல்லதம்பியை ஆதரித்து, தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கந்திலி ஒன்றியத்தின் கொரட்டி மற்றும் சேலம் கூட்ரோடு பகுதிகளில் தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
பிரச்சாரத்தின் போது அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ஜி.எஸ்.டி. வரி அமல்படுத்தப்பட்ட பின்னர் அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதாக குற்றம்சாட்டினார். காங்கிரஸ் ஆட்சியில் ரூ.400க்கு விற்பனை செய்யப்பட்ட சிலிண்டர் தற்போது ரூ.1,000 ஆகியுள்ளதாகவும், இதற்கு மத்திய அரசு தான் காரணம் என்றும் தெரிவித்தார்.
மேலும், கொரோனா காலத்தில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நல நிதி வழங்கவில்லை என்றும், ஆனால் மு.க.ஸ்டாலின் பதவியேற்றதும் அனைத்து குடும்பங்களுக்கும் நிதி உதவி வழங்கினார் என்றும் குறிப்பிட்டார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி பங்கு, கல்வி மானியம், புயல் நிவாரண நிதி உள்ளிட்டவற்றை வழங்காமல் தடை செய்கிறது என்றும், இதனால் “இது டெல்லிக்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான ஜனநாயகப் போர்” எனவும் அவர் கூறினார். இதில் தமிழ்நாடு வெற்றி பெற வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் கந்திலி ஒன்றிய செயலாளர்கள் மோகன்ராஜ், குணசேகரன், முருகேசன், நகர கழக செயலாளர் எஸ்.ராஜேந்திரன், நகர மன்ற தலைவர் சங்கீதா வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.