மக்களின் ஆசையை தூண்டி, அவர்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்தவர்கள் திமுக

Published: 02/04/2024 11:04 AM Updated: 02/04/2024 11:04 AM
Ads
news-banner

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஏ.எல்.விஜயனை ஆதரித்து தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி சோளிங்கர் பாண்டியநல்லூர் பகுதியில் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

 

அப்போது பேசிய அவர், ஸ்டாலின் தன்னை விமர்சிப்பதாகவும், விமர்சனங்களுக்கு அதிமுக தொண்டன் கூட அஞ்சமாட்டான் என்றும் கூறினார். மிரட்டலால் எங்களை அடிபணிய வைக்க முடியாது என்றும், அதிமுக மீது பொய் வழக்கு போடுவது திமுகவிற்கு வாடிக்கையாகி விட்டது என்றும், கீழே உள்ள சக்கரம் மேலே வந்தால் உங்களுக்கும் அதே கதி தான் எனவும், எங்கள் ஆட்சியில் திமுக மீது எந்த வழக்கும் போடவில்லை, நாங்கள் மக்களுக்காக பணியாற்றுவதை மட்டுமே சிந்தித்தோம் என கூறினார்.

 

திமுக எந்த திட்டங்களையும் கொண்டுவரவில்லை, கொண்டு வந்தால் தானே நாங்கள் குறை கூற முடியும் என திமுகவை விமர்சித்த அவர், தில், திராணி, தெம்பு இருந்தால் எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள், அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கிய பணிகளுக்கு வெறும் ஸ்டிக்கர் மட்டுமே ஒட்டி திறந்து வைக்கிறார்கள் என விமர்சித்தார்.

 

மேலும் ஒருவரை ஏமாற்ற வேண்டும் என்றால் அவர் ஆசையை தூண்ட வேண்டும் என்ற சதுரங்க வேட்டை பட வசனத்திற்கு ஏற்றார் போல பெட்டி வைத்து மக்களின் குறைகளை மனுவாக வாங்கி அவர்கள் குறைகளை தீர்ப்பதாக ஆசையை தூண்டி ஆட்சிக்கு வந்துள்ளதாகவும், நல்லது செய்ய திமுகவினர் விஞ்ஞான மூளையை ஒருபோதும் பயன்படுத்த மாட்டார்கள், ஆனால் மக்களை ஏமாற்ற மட்டுமே பயன்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டினார்.

 

மோடியை விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த அவர், எதிர்க்கட்சியாக இருந்து எப்படி மத்திய அரசை விமர்சிக்க முடியும், ஆட்சியில் இருந்தால் தமிழக மக்களுக்கு எதிரான திட்டங்களை மத்திய அரசு அமுல்படுத்தினால் அதனை கண்டித்து குரல் நாங்கள் குரல் கொடுப்போம். காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு அமுல்படுத்த தவறிய போது, 22 நாட்கள் நாடாளுமன்ற அவையில் குரல் கொடுத்து அவையை ஒத்திவைத்து தடுத்தது  அதிமுக அரசு என குறிப்பிட்ட அவர், நீட் தேர்வு விவகாரத்தில் நாடாளுமன்ற அவையில் அமுத்தம் கொடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும். ஆனால் அதை வைத்து அரசியல் செய்வது திமுக என சாடினார்.