நினைத்தாலே முக்திதரும் திருவண்ணாமலை
அண்ணாமலையார் திருக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள்
கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்கின்றனர்.
சித்ரா பௌர்ணமி தினத்தில் கிரிவலம்
வந்து வழிபட்டால் ஆண்டுதோறும் உள்ள பௌர்ணமிக்கு கிரிவலம் வந்த பலன் கிடைப்பதாக ஐதீகம்.
அதுமட்டுமின்றி சித்ரா பவுர்ணமி
நாட்களில் பக்தர்களுடன் சித்தர்களும் இணைந்து கிரிவலம் வருவார்கள் என்பதும் ஐதீகம்.
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில்
பின்புறம் உள்ள 2668 அடி உயரம் கொண்ட மலையையே சிவனாக எண்ணி லட்சக்கணக்கான பக்தர்கள்
நாளைய தினம் கிரிவலம் வந்து அண்ணாமலையாரை வழிபாடு செய்வார்கள்.
வரும் பக்தர்களுக்கு தேவையான அனைத்து
அடிப்படை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
14 கிலோமீட்டர் கொண்ட கிரிவலப்
பாதையில் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கரபாண்டியன்
நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
கிரிவலப் பாதையில் நடைபாதைகளை
ஆக்கிரமித்து யாரும் கடைகள் வைத்து வணிகம் செய்யக்கூடாது என்றும், மீறி வியாபாரம் செய்தால்
பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
கிரிவலப் பாதையில் உள்ள நெடுஞ்சாலைத்துறை
சார்பில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு செய்தார். அதனை தொடர்ந்து
கிரிவலப் பாதையில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கழிவறைகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு
ஆய்வு மேற்கொண்ட அவர் 14 கிலோமீட்டர் முழுவதும் குடிதண்ணீர் வசதிகள் உள்ளதா? என்பதையும்
அதிகாரியிடம் கேட்டு அறிந்தார்.
அதேபோன்று பக்தர்கள் பாதுகாப்பு
முன்னேற்பாடுகள் குறித்து காவல்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள்,
கண்காணிப்பு கோபுரங்கள் உள்ளிட்டவையும் சரியாக அமைக்கப்பட்டுள்ளதா? கண்காணிப்பு கேமராக்கள்
இயக்கப்படுகிறதா? என்பதை குறித்தும் ஆய்வு செய்த அவர், அனைத்து முறையான பாதுகாப்பு
அடிப்படை வசதிகளை விரைவாக ஏற்படுத்தித் தர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
மேலும், திருவண்ணாமலை காஞ்சி சாலை,
கிரிவல பாதையில் நேற்று உலக பூமி தினத்தை முன்னிட்டு
மரக்கன்று நடும் பணியினை தெ.பாஸ்கர பாண்டியன், மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.