பஞ்சபூத தலங்களில் அக்னித்தலமாகவும் நினைத்தாலே முக்தி தரும் தலமாகவும் விளங்கக்கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஒவ்வொரு மாதம் பௌர்ணமி தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். குறிப்பாக சித்ரா பௌர்ணமி தினத்தன்று சித்தர்கள் பக்தர்களுடன் இணைந்து கிரிவலம் வருவதாகவும், இந்த தினத்தில் கிரிவலம் வந்தால் 12 மாதம் கிரிவலம் வந்ததற்குண்டான பலன் என்பதும் ஐதீகம்.
இந்த ஆண்டு சித்ரா பௌர்ணமி ஆனது இன்று அதிகாலை 04:16 மணிக்கு தொடங்கி நாளை அதிகாலை 05:47 மணிக்கு நிறைவடை உள்ளதாக அண்ணாமலையார் திருக்கோவில் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் சித்ரா பௌர்ணமி நேற்று தொடங்கியதை ஒட்டி பல்வேறு மாவட்ட மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் காலை முதல் திருவண்ணாமலைக்கு வந்து கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் காலை முதல் தொடர்ந்து கிரிவலம் மேற்கொண்டனர். தொடர்ந்து மாலை நேரம் பௌர்ணமி நிலவின் ஒளியில் விடிய விடிய கிரிவலம் வந்து அண்ணாமலையாரை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசித்தனர்.
சித்ரா பௌர்ணமிக்காக இன்று அதிகாலை அண்ணாமலையார் திருக்கோவில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து அண்ணாமலையார் திருக்கோவிலில் 5 மணி நேரம் காத்திருந்து நீண்ட வரிசையில் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
அதிகாலை முதல் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்த நிலையில் மாலைக்கு மேல் குளிர்ந்த சூழல் ஏற்பட்டது. கிரிவலப் பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் நமசிவாய மந்திரத்தை ஜெபித்த படியும் சங்கொலி எழுப்பிய படியும் விடிய விடிய கிரிவலப் பாதையில் அமைந்துள்ள திருநேர் அண்ணாமலையார் திருக்கோவில், இந்திரலிங்கம் அக்னி லிங்கம் எமலங்கம் உள்ளிட்ட அஷ்டலிங்க திருக்கோவில்களையும் தரிசித்து இடுக்கு பிள்ளையார் கோவில் என அனைத்து திருக்கோவில்களையும் தரிசனம் செய்து கிரிவலம் வந்தனர்.
கிரிவலம் வரும் பக்தர்களின் வசதிக்காக கிரிவலப் பாதை அண்ணாமலையார் திருக்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் நீர்மோர், தர்பூசணி கரும்பு ஜூஸ் பிஸ்கட்டுகள் உள்ளிட்ட குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 2500 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
குறிப்பாக திருவண்ணாமலை நகரம் அண்ணாமலையார் திருக்கோவில் கிரிவலப் பாதை என இரண்டு இடங்களில் சுமார் 500 க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு பக்தர்கள் தீவிரமாக கண்காணிக்க பட்டதோடு மட்டுமின்றி 24 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வடக்கு மண்டல காவல்துறை தலைவர் தலைமையில் திருவண்ணாமலை வேலூர் விழுப்புரம் கிருஷ்ணகிரி காஞ்சிபுரம் கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பக்தர்களின் வசதிக்காக போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் 9 சாலைகளில் 13 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இரவு நேரம் ஆக ஆக கிரிவலப் பாதை முழுக்க மக்கள் வெள்ளத்தில் தற்பொழுது திருவண்ணாமலை காணப்பட்டது.பக்தர்கள் தங்கள் குடும்பத்தினருடன் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதையில் உள்ள அனைத்து திருக்கோவில்களையும் தரிசித்து கிரிவலம்மேற்கொண்டு வருகின்றனர்.
கிரிவலப் பாதையை தூய்மையாக வைத்திருக்க சுமார் 1800 தூய்மை காவலர்கள் சுழற்சி முறையில் பணி அமர்த்தப்பட்டு கிரிவலப் பாதை முழுக்க உடனுக்குடன் தூய்மைப்படுத்தப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.