திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதை
உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 19 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து 3 நபர்களை
கிராமிய காவல் நிலைய போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர்
அல்லிநகர் பகுதியை சேர்ந்தவர்கள் அர்ஜுன் மற்றும் பிரபு. திருவண்ணாமலை அடுத்த கொண்டம்
பகுதியைச் சேர்ந்தவர் சந்தோஷ். இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்கள் மூவரும் சமீப காலமாக
இரு சக்கர வாகனங்களை திருடி அதனை விற்பனை செய்து வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
குறிப்பாக பகல் நேரங்களில் வீட்டின்
முன்பாக நிறுத்தப்படும் இருசக்கர வாகனம், அலுவலகம், வங்கி, தனியார் நிதி நிறுவனம் உள்ளிட்ட
பல்வேறு இடங்களில் பொதுமக்கள் நிறுத்திவிட்டு சென்ற சிறிது நேரத்திலேயே இவர்கள் 3 பேரும்
சேர்ந்து இருசக்கர வாகனத்தை திருடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இருசக்கர வாகனங்கள்
அதிகளவு திருடப்படுவதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை நகர காவல்
துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலைய
ஆய்வாளர் விஜயபாஸ்கர் தலைமையில் 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை
நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை திருவண்ணாமலை
வேலூர் புறவழிச்சாலை தீபம் நகர் அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட பொழுது சந்தோஷ்
மற்றும் அர்ஜுன் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். இவர்களுக்கு பின்னால் தனியாக
இரு சக்கர வாகனத்தில் பிரபு என்ற நபர் வந்துள்ளார்.
இவர்களை நிறுத்தி வாகன தணிக்கை
செய்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர்
அவர்கள் 3 பேரையும் திருவண்ணாமலை கிராமிய காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் திருவண்ணாமலை
நகரம் கிரிவலப் பாதை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர்ந்து இருசக்கர வாகனம் திருடி
வந்ததை அவர்கள் மூவரும் ஒப்புக்கொண்டனர். மேலும் பல்வேறு இடங்களில் திருடிய இருசக்கர
வாகனங்களை விற்பனைக்காக கொண்டம் பகுதியில் மறைத்து வைத்திருந்ததை தெரிந்துகொண்ட திருவண்ணாமலை
கிராமிய காவல் நிலைய போலீசார் உடனடியாக அனைத்து இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து
3 பேரையும் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
மேலும் அனைத்து இருசக்கர வாகன
உரிமையாளர்களை அழைத்து அவர்களிடம் இருசக்கர வாகனம் ஒப்படைக்க போவதாக திருவண்ணாமலை நகர
காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் தகவல் தெரிவித்தார்.