அண்ணாமலையார் திருக்கோவிலில் பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் முகூர்த்த விழா

Published: 24/09/2024 17:01 PM Updated: 24/09/2024 17:02 PM
Ads
news-banner

உலகப் பிரசித்தி பெற்ற திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு  அண்ணாமலையார் திருக்கோவிலில் பூர்வாங்க பணிகளுக்கான பந்தக்கால் முகூர்த்த  விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.


திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா வருகின்ற டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழாவிற்கான பூர்வாங்க பணிகள் செய்ய தமிழகத்திலேயே 2 வது மிக உயரமான ராஜகோபுரம் முன்புள்ள 16 கால் மண்டபம் அருகில் திருக்கார்த்திகை தீப திருவிழா பந்தக்கால் முகூர்த்த விழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது.


நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக் கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவில் ஆண்டுதோறும் ஏராளமான விழாக்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா என்பது உலகப் பிரசித்தி பெற்ற ஒரு திருவிழாவாகும். இந்த திருவிழாவிற்கு தமிழகம் மற்றும் வெளி மாநிலம் மற்றும் வெளி நாடுகளிலிருந்தும் சுமார் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இந்த ஸ்ரீ குரோதி ஆண்டு திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் கொடியேற்று விழா வருகிற டிசம்பர் மாதம் 4-ஆம் தேதி காலை திருக்கோவிலில் அண்ணாமலையார் சன்னதியின் முன்புறம் உள்ள 64 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி, முக்கிய விழாக்கள் ஆன 6-ஆம் நாள் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி இரவு வெள்ளித் தேரும்,  டிசம்பர் 10-ஆம் தேதி மாடவீதிகளில் தேர்த் திருவிழாவும், அதனைத்தொடர்ந்து டிசம்பர் மாதம் 13-ஆம் தேதி அதிகாலை திருக்கோவிலின் கருவறையின் முன்பு 4 மணிக்கு பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து அன்று மாலை திருக்கோவிலின் பின்புறம் உள்ள 2668 அடி உயரமுள்ள தீபமலையின் மீது மகா தீபமும் ஏற்றப்படும்.


இந்த விழாவில் மாநில தடகள சங்க துணைத் தலைவர் ..வே. கம்பன், திருவண்ணாமலை ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன், திருக்கோவில் இணை ஆணையர் ஜோதி, திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஜீவானந்தம் மற்றும் உறுப்பினர்கள்  உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.