தமிழ்நாட்டில் தமிழர்கள் வெல்ல வேண்டும் டெல்லி தோற்கடிக்கப்பட வேண்டும்

Published: 22/04/2026 09:24 AM Updated: 22/04/2026 09:24 AM
Ads
news-banner

தமிழகத்தின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில் தமிழகம் முழுக்க வேட்பாளர்களும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான எ.வ.வேலு தனது இறுதி கட்டப் பிரச்சாரத்தை நேற்று மாநகராட்சி பகுதியில் காலை முதல் தொடர்ந்து மேற்கொண்டார். மாநகராட்சிக்கு உட்பட்ட தேனிமலை காளியம்மன் கோவில் தெரு, சமுத்திரம் ஏரி, வஉசி நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு நடந்தே சென்று வாக்கு சேகரித்த அவருக்கு வழி நெடுகிலும் பெண்கள் மலர்தூவியும் ஆரத்தி எடுத்தும் உற்சாகமாக வரவேற்றனர். தொடர்ந்து அவருக்கு ராட்சத கிரேன் மூலம் 50 கிலோ எடை கொண்ட சாத்துக்குடி மாலையும், ரோஜா மாலையையும் தொண்டர்கள் அணிவித்து அவரை உற்சாகமாக வரவேற்றனர்.

திருவண்ணாமலை நகராட்சி நூறு ஆண்டு காலமாக நகராட்சியாக இருந்த நிலையில் திராவிட மாடல் ஆட்சியில் தான் திருவண்ணாமலை மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பாக திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட தேனிமலை பகுதிக்கு தேவையான சாலை வசதி எல்ஈடி மின்விளக்கு வசதி, மூன்றாவது கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வசதி, தேனி மலை மக்களுக்கு பட்டா வசதி என அனைத்தையும் செய்து கொடுத்துள்ளேன் என்றும் கூறினார். பட்டா கிடைக்கப் பெறாத சிலருக்கும் திமுக ஆட்சி அமைந்த உடன் நானே நேரில் வந்து இப்பகுதியில் முகாமிட்டு அனைவருக்கும் பட்டா வழங்கிட உதவி செய்வேன் என்றும் உறுதி அளித்தார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது, திராவிட மாடல் ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் நேரடியாக மக்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அதனை பட்டியலிட்டு பேசினார். மேலும் நாம் அனைவரும் தமிழர்கள் என்றும் டெல்லியை தோற்கடித்து தமிழ்நாட்டை வெல்ல பாடுபட வேண்டும் என்றும் தமிழர்கள் தமிழ்நாட்டில் வெல்ல வேண்டும் என்றும் டெல்லி தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட அவர் நீங்கள் மட்டுமல்லாமல் அக்கம் பக்கத்தினர், நண்பர்கள், உற்றார் உறவினர்கள் அனைவரிடமும் கூறி உதயசூரியன் சின்னத்தில் எனக்கு பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டுமென இரு கரம் கூப்பி அனைவரிடமும் உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை சேகரித்தார்.

வாக்குசேகரிப்பு நிகழ்ச்சியில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், மாவட்ட பொருளாளர் எஸ்.பன்னீர்செல்வம், மாநகர செயலாளர் ப.கார்த்திவேல்மாறன், மாவட்ட துணை செயலாளர் பிரியா விஜயரங்கன், காங்கிரஸ் மாவட்டத் தலைவர் கே.குணசேகரன், தி.க. தலைவர் சி.மூர்த்தி, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் சீனி.கார்த்திகேயன், தே.மு.தி.க. மாவட்ட செயலாளர் வி.எம்.நேரு, சி.பி.எம்.எம்.சிவக்குமார், சி.பி.ஐ., மாவட்ட செயலாளர் இரா.திருமலை, முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் ஐ.எம்.சுலைமான் கான், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் ச.நியூட்டன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டத் தலைவர் நாசர் உசேன், மக்கள் நீதி மைய்யம் மண்டல பொறுப்பாளர் இரா.அருள், மனிதநேய ஜனநாயக கட்சி ஜி.கேட் குமார், எஸ்.டி.பி.ஐ.மாவட்ட தலைவர் முஸ்தாக் பாஷா, தமிழக முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் கு.ராஜாராம், தமிழக விவசாய தொழிலாளர் பி.வாசு, ஆதித் தமிழர் பேரவை எஸ்.கந்தன், தலித் விடுதலை இயக்கம் என்.ஏ.கிச்சா மற்றும் துணை மேயர் சு.ராஜாங்கம், பகுதி பொறுப்பாளர்கள் சு.விஜி(எ) விஜயராஜ், அ.கோவிந்தன், ந.சீனுவாசன், குட்டி க.புகழேந்தி, சி.சண்முகம், பா.ஷெரீப் மற்றும் கூட்டணி கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

YOU MAY ALSO LIKE