போளூர் எம்எல்ஏ அபிஷேக் நேரில் சந்தித்து ஆறுதல்

Published: 26/07/2026 07:30 AM Updated: 26/07/2026 07:30 AM
Ads
news-banner

போளூர் அடுத்த கரைபூண்டி தரணி தனியார் சர்க்கரை ஆலையில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் முன்னறிவிப்பு இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டதால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளி அரளி விதை அரைத்து குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த கரைப்பூண்டியில் இயங்கி வரும் தனியார் தரணி சர்க்கரை ஆலையில், 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 23ந்தேதி முன்னறிவிப்பின்றி பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தொழிலாளர்கள் கடந்த 2 நாட்களாக ஆலையிலேயே உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், ஆலையில் 30 ஆண்டுகளாக பணியாற்றி வந்த பன்னீர்செல்வம் (55), பணி நீக்கம் மற்றும் நிலுவைத் தொகை வழங்கப்படாததால் மனஉளைச்சலுக்கு ஆளாகி நேற்று முன்தினம் அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அவர், போளூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தகவலறிந்த தவெக சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக், மருத்துவமனைக்கு சென்று பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தொழிலாளர்களின் நிலுவைத் தொகை மற்றும் பணிநீக்கப் பிரச்சினையை தமிழக முதலமைச்சர் மற்றும் மாவட்ட அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவதாக தெரிவித்தார்.

பணிநீக்க விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்று வரும் உள்ளிருப்பு போராட்டத்தின் மத்தியில், 30 ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் போளூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.