தி.மலை இடுக்கு பிள்ளையார் கோவிலில் ஆந்திர பக்தர் உயிாிழப்பு

Published: 26/07/2026 07:35 AM Updated: 26/07/2026 07:35 AM
Ads
news-banner

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு கார்த்திகை தீபம் மற்றும் பௌர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும், வார விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்களும் திருவண்ணாமலைக்கு வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டும் வருகின்றனர்.

மேலும் கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள், ஆசிரமங்கள், சிறப்பு வாய்ந்த கோயில்கள் என அனைத்தையும் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் கிரிவலப்பாதையில் அமைந்துள்ள இடுக்கு பிள்ளையார் நேற்று இரவு 11 மணிக்கு கிரிவலம் மேற்கொண்டு வந்த ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் ராஜமுந்திரி பகுதியை சேர்ந்த ஆன்மீக பக்தர் மணிக்குமார் (36) இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு வந்து இடுக்கு பிள்ளையாரை தரிசனம் செய்ய சென்ற பொழுது, உடல் பருமன் காரணமாக கோவில் இடுக்கிலிருந்து வெளியே வர முடியாமல் அவதிப்பட்டு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது, பின்னர் வெளியே வர முடியாமல் இருந்த அவரை  பொதுமக்கள் உதவியுடன் உடன் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினார்.

உடனடியாக அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது, திருவண்ணாமலை கிரிவலம் வந்து இடுக்குப் பிள்ளையாரை தரிசனம் செய்ய வந்த பக்தர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.