விழுப்புரம் நாடாளுமன்ற
தொகுதியில் இந்தியா கூட்டணி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் துரை ரவிக்குமார் பானை சின்னத்தில்
போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ்
தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி.மஸ்தான் திண்டிவனம் தொகுதி ஒலக்கூர் கிழக்கு
ஒன்றியம் மேல்பேட்டை, சாரம், மங்கலம், கீழ் ஆதனூர், ஒலக்கூர், கோனேரிகுப்பம்,
பள்ளிப்பாக்கம், ஓங்கூர் ஆகிய ஊராட்சிகளில் பானை சின்னத்திற்கு தீவிர வாக்கு
சேகரித்தார்.
தொடர்ந்த பொது மக்களிடம் பானை சின்னத்துக்கு வாக்கு கேட்டு
முதலமைச்சரின் சாதனைகளை பட்டியலிட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தான் கடந்த 3 ஆண்டு
காலத்தில் 2 லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு திட்டத்தையும் அவர்களுடைய
கடனை தள்ளுபடி, சுய உதவி குழு கடன் தள்ளுபடி, மீண்டும் பொருளாதாரத்தில் அவர்கள் வளர் வதற்கு கடன் வழங்கி இது போன்ற
சாதனைகளை செய்து கொண்டிருக்கின்ற அரசு திராவிட மாடல் அரசு என்றும், ஒன்றிய பாஜக
ஆட்சியில் பிரதமர் மோடி தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் வெளிநாட்டில் பதுக்கி
வைக்கப்பட்டு இருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்தியாவில் உள்ளவர்களுடைய ஒவ்வொரு
வங்கி கணக்கிலும் அந்த பணத்தை செலுத்துவேன் என்றும், 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித்
தருவேன் என்று கூறிய மோடி அதை எதையும் செய்யவில்லை என குற்றம் சாட்டினார்.
மேலும் இந்திய நாட்டில்
பொருளாதாரத்தை குறிப்பாக 10 பணக்காரர்களுக்கு வழி வகுத்துக் கொண்டிருக்கும்
பிரதமர் மோடி ஒட்டுமொத்த இந்திய மக்களையும் ஏமாற்றியுள்ளார். குறிப்பாக
விவசாயிகளையும் கூலி தொழிலாளர்களை வஞ்சிக்கின்ற பாசிச பாஜக மோடியை இந்திய நாட்டில்
இருந்து அப்புறப்படுத்துவதற்கு வாக்காளர்கள் அனைவரும் பானை சின்னத்திற்கு
வாக்களித்து ஜனநாயகத்தை காப்பாற்ற உறுதிகொள்ள வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான்
வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து அமைச்சர் செஞ்சி
மஸ்தான் முதலமைச்சர் செய்த சாதனைகள்
அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி தோழமைக் கட்சி வேட்பாளரான துரை ரவிக்குமாரை
வெற்றி பெற செய்ய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
இதில் முன்னாள் சட்டமன்ற
உறுப்பினர் சீத்தாபதி சொக்கலிங்கம், ஒலக்கூர் ஒன்றிய பெருந்தலைவர் சொக்கலிங்கம்,
துணை சேர்மன் ராஜாராமன், தொகுதி பொறுப்பாளர் ரமணன், மாவட்ட பொறியாளர் அணி
அமைப்பாளர் செந்தில் குமார், சிறுபான்மையினர் அணி அமைப்பாளர் அன்சாரி, ஒன்றிய அவை
தலைவர் புருஷோத்தமன், மாவட்ட பிரதிநிதி ரவி உள்ளிட்ட தோழமைக் கட்சி நிர்வாகிகள்
கலந்து கொண்டனர்.