திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய
தேசங்களில் ஒன்றான ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ
விழா 24 ம் தேதி வரை நாட்கள் நடைபெறுகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை
மாத பிரம்மோற்சவ விழா கடந்த 15-ஆம் தேதி காலை 4.45 மணிக்கு கொடியேற்றத்துடன்
தொடங்கியது. இதனைத் தொடர்ந்து காலை தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும்,
உற்சவர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா
வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும்
விழாவில் 2-ஆம் நாள் காலை ஹம்ஸ வாகனத்தில் வீதி உலாவும், திருமஞ்சனம்
நிகழ்ச்சியும், இரவு சூர்ய பிரபை பக்தி உலாவும் நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின்
3-ஆம் நாளான நேற்று காலை கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இரவு ஹனுமந்த
வாகனத்தில் வீதி உலாவும், நாளை 4-ஆம் நாளான 18 ம் தேதி காலை சேஷ வாகனத்திலும்,
இரவு சந்திர ப்ரபை வாகனத்தில் வீதி உலா நடைபெற உள்ளது.
5-ஆம் நாளான 19-ஆம் தேதி காலை
நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு யாளி வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற உள்ளது.
6-ஆம் நாளான 20 ம் தேதி காலை
வேணுகோபாலன் திருக்கோலமும் சூர்ணாபிஷேகமும், வெள்ளி சப்பரத்தில் வீதி உலாவும்,
இரவு யானை வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற்றது.
பிரம்மோற்சவத்தின் முக்கிய
நிகழ்வாக 7-ஆம் நாளான நேற்று வீரராகவர் கோயிலின் 60 அடி உயரமும், 21 அடி அகலமும்
கொண்ட திருத்தேர் பவனி நடைபெற்றது. திருதேரில் காலை 7 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் ஸ்ரீ வீரராகவர் பெருமாள் தேரடியில் இருந்து
புறப்பட்டு நான்கு மாட வீதிகள் வழியாக சென்று தேர் மீண்டும் தேரடியை
வந்தடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ வைத்திய வீரராகவப்
பெருமாள் நோயை தீர்க்க வல்லவர் என்பதால் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றை தேர்
சக்கரத்தில் கொட்டி தங்கள் வேண்டுதலை நிறைவேற்றினர். இந்த
தேர் திருவிழாவில் திருவள்ளூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டு வீரராகவரை வழிபட்டு சென்றனர்.
இதனைத் தொடர்ந்து 8-ம் நாளான இன்று
காலை திருமஞ்ஜனமும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார். 9 ம்
நாளான நாளை காலை ஆள்மேல் பல்லக்கு நிகழ்ச்சியும், திருக்குளத்தில் தீர்த்தவாரியும்
நடைபெற உள்ளது. இரவு விஜயகோடி விமானத்திலும், 10-ம் நாளான 24 ம் தேதி காலை
திருமஞ்ஜனமும், இரவு கண்ணாடி பல்லக்கும் என உற்சவர் ஸ்ரீ வைத்திய வீரராகவ பெருமாள்
பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை
கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்பு அலுவலர் எஸ்.சம்பத் மற்றும்
கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.