உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் அரசு மரியாதை செலுத்தினார்

Published: 05/05/2024 12:39 PM Updated: 05/05/2024 12:39 PM
Ads
news-banner

கலசபாக்கம் தொகுதிக்குபட்பட்ட, புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அல்லியந்தல் ஊராட்சியை சார்ந்த உடல் உறுப்புகள் தானம் பெறப்பட்ட நபரின் உடலுக்கு நேற்று மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், நேரில் அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர்.

 

உடல் உறுப்புகள் தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கானோருக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. மூளைச்சாவு நிலையை அடைந்த துயர சூழ்நிலையிலும், உடல் உறுப்புகளை தானமாக அளிக்க முன்வரும் குடும்பங்களின் தன்னலமற்ற தியாகங்களால் தான் இந்த சாதனை சாத்தியமாகி உள்ளது.

 

உடல் உறுப்புகளை தானமாக வழங்கி பல உயிர்களை காப்போரின் தியாகத்தினை போற்றிடும் வகையில், அவர்களது உடலுக்கு இறுதி சடங்குகள் அரசு மரியாதைகளுடன் மேற்கொள்ளப்படும் என கடந்த ஆண்டு செப்டம்பர் 23 தேதி மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

 

இந்நிலையில் செங்கம் வட்டம், புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியம் அல்லியந்தல் ஊராட்சியை சேர்ந்த கே.பாலமுருகன் என்பவர் செங்கம் சாலை, பாச்சல் ஊராட்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த 3ஆம் தேதி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து அண்ணாரது உடல் உறுப்பு தானமாக பெறப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசின் சார்பில் மாவட்ட ஆட்சித்தலைவர்.தெ.பாஸ்கர பாண்டியன், நேற்று அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.

YOU MAY ALSO LIKE