திருவண்ணாமலை மாவட்ட
ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நேற்று அனைத்து துறைகளின் திட்ட செயலாக்கம்
குறித்த ஆய்வுக்கூட்டம் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் தகவல்
தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்
குமார், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், முன்னிலையில் ஆய்வு
கூட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் வறட்சி
காலத்தில் குடிநீர் தட்டுப்பாடுகளின்றி வழங்குவதற்கும் மற்றும் அதற்கான
முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில் நகராட்சி
ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தமிழ்நாடு
குடிநீர் வாரிய அலுவலர்கள், மின்சாரத் துறை அலுவலர்கள் மற்றும் பிற துறை
அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் ஊரக மற்றும்
ஊராட்சிப்பகுதிகளில் பொதுமக்களுக்கு சீராக குடிநீர் வழங்கப்படுகிறதா என்பதை
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுமென்றும், குடிநீர் சம்பந்தமாக
வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கைகள் எடுத்து அதனை சரிசெய்ய வேண்டுமென்றும்,
தேர்தலுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்ட குடிநீர் சம்பந்தமான மேற்கொண்ட வளர்ச்சி
பணிகளை விரைவாக முடித்து அதனை பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும். மேலும் குடிநீர்
ஆதாரங்கள், குடிநீர் வழங்குவதில் உள்ள சிரமங்கள் மற்றும் குடிநீர்
தட்டுப்பாட்டின்றி வழங்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆய்வு
மேற்கொள்ளப்பட்டது. அதனை தொடர்ந்து, வெயில் தாக்கம் காரணமாக, பொதுமக்களுக்கு
பாதிப்பு இல்லாத வகையில் அனைத்து அலுவலகங்களிலும், பொது மக்கள் கூடும் இடங்களிலும்
மற்றும் ரேஷன் கடைகளில் குடிநீர் மற்றும் ஓஆர்எஸ் கரைசல் வைக்க ஏற்பாடு செய்ய
அறிவுறுத்தப்பட்டது.
மேலும், நடைபெற்று முடிந்த 12-ஆம்
வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவாக உள்ளது குறித்தும், அடுத்த ஆண்டிற்கான தேர்வில்
தேர்ச்சி விகிதத்தினை அதிகரிக்க மேற்கொள்ளப்பட்டுள்ள திட்டங்கள் குறித்தும்,
கல்வித்துறை அலுவலர்களிடம் ஆய்வு செய்யப்பட்டது. தேர்ச்சி விகிதத்தில் 85
சதவீதத்திற்கும் குறைவாக உள்ள பள்ளிகளை கணக்கெடுத்து ஆய்வு மேற்கொண்டு தேர்ச்சி
விகிதத்தினை அதிகரிக்க மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பள்ளிகளில்
வகுப்பில் கல்வியில் பின்தங்கியுள்ள மாணவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கூடுதல்
கவனம் செலுத்தி அவர்களின் பெற்றோர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்கி அவர்கள் கல்வி
கற்பதற்கான சூழ்நிலைகளை உருவாக்க வேண்டும் கல்வித்துறை அதிகாரிகள் இதை கண்காணித்து
தேர்ச்சி சதவிகித்தை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசு கூடுதல்
தலைமைச் செயலாளர் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைகள் துறை /
மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ் குமார், ஆலோசனை வழங்கினார்.
மேலும், ஆய்வு கூட்டத்தை
தொடர்ந்து திருவண்ணாமலை நகரில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை
சார்பில் ரூ.30.15 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து
நிலையத்தினையும், ரூ.29.25 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி
சந்தையினை பார்வையிட்டு கட்டுமான பணிகள் நடைபெறுவதையும் நேரில் சென்று
பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து, திருவண்ணாமலை
கள்ளக்குறிச்சி சாலையில் தேனிமலையில் ரூபாய் 2 கோடி மதிப்பில் நெடுஞ்சாலை துறை
மூலம் கட்டப்பட்டு வரும் சிறுபாலத்தினையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
சார்பில் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் குருவிமலை காலூர் சாலையில் செய்யாற்றின்
குறுக்கே ரூ. 9.21 கோடி மதிப்பில் புதிதாக பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதையும்
நேரில் சென்று ஆய்வு செய்தார்.
மேலும், களம்பூர் பேரூராட்சி
அலுவலக வளாகத்தில் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூபாய் 84.66 இலட்சம் மதிப்பில்
புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியினையும், ஊரக வளர்ச்சி
மற்றும் ஊராட்சி துறை சார்பில், மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றியம் முன்ளிப்பட்டு
ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ.5.37 இலட்சம் மதிப்பில்
குடிநீர் விநியோக பைப்லைன் நீட்டிப்பு செய்யும் பணி நடைபெற்று வருவதையும் மாவட்ட
ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன்,
முன்னிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் / அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும்
தகவல் தொழில்நுட்பவியல், டிஜிட்டல் சேவைத் துறை செயலாளர் தீரஜ் குமார். நேரில்
சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட காவல்
கண்காணிப்பாளர் கி.கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி செ.ஆ.ரிஷப், மாவட்ட
வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, செய்யார் சார் ஆட்சியர் பல்லவி வர்மா,, திட்ட
இயக்குநர், மகளிர் திட்டம் சரண்யாதேவி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக
உதவியாளர்கள் (பொது) சிவதாஸ், (வனர்ச்சி) திருமால், ஆரணி வருவாய் கோட்டாட்சியர்
பாலசுப்பிரமணியன் மற்றும் அரசு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.