அரக்கோணத்தில் மின்சார ரயில்களில் செயின் பறித்த ஆட்டோ ஓட்டுநரை, ரயிலில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து
அரக்கோணம் ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 11 சவரன் நகையை பறிமுதல் செய்தனர்.
திருவாரூர் மாவட்டம்
கொரடாச்சேரியை சேர்ந்தவர் அபிராமி. இவர் கடந்த வாரம் ஆவடியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்து
அங்கிருந்து திருத்தணி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றார்.
சாமி தரிசனம் முடித்துவிட்டு
திருத்தணியில் இருந்து ஆவடி செல்வதற்கு மின்சார ரயிலில் இரவு 9 மணிக்கு வந்து
கொண்டிருந்தார். ரயில் அரக்கோணம் அருகில் வரும்போது சிக்னலுக்காக நின்றது.
அப்போது திடீரென அபிராமி
கழுத்தில் இருந்த 7 சவரன் தாலி சடை பறித்துக் கொண்டு மர்ம நபர் ரயிலில் இருந்து
கீழே குதித்து தப்பி ஓடினார்.
இது குறித்து அரக்கோணம் ரயில்வே
போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். மேலும் ஆவடியில் இருந்து அரக்கோணம் வந்த மின்சார ரயிலில் பார்வதி
என்பவரிடம் 4 சவரன் செயின் பறிக்கப்பட்டது. மின்சார ரயில்களில் தொடர்ந்து
பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வந்த நிலையில் டிஎஸ்பி கர்ணன்
தலைமையில், இன்ஸ்பெக்டர் பத்மநாபன், சப்-இன்ஸ்பெக்டர் சவுந்தர்ராஜன் மற்றும்
போலீசார்புதியதாக தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தனர்.
இந்நிலையில் திருத்தணியில்
இருந்து சென்னை சென்ற மின்சார ரயிலில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா
பொருத்தப்பட்டிருந்தது. அந்த கேமராவில் செயின் பறிப்பு
கொள்ளையன் முகம் பதிவாகியுள்ளதா என்று ரயில்வே போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் அபிராமியிடம் தாலி சரடு
பறித்த கொள்ளையன் முகம் தெளிவாக பதிவாகியிருந்தது. அதை வைத்து அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் 4 வது பிளாட்பாரத்தில்
போலீசுக்கு சந்தேகம் அளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை
பிடித்து விசாரித்ததில் திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் நேரு நகரைச் சேர்ந்த
ஆட்டோ ஓட்டுநர் நாகராஜ்( 35) என்பதும் அவர் ரயிலில் பெண்
பயணிகளிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டதும் தெரியவந்தது. போலீசார்
வழக்கு பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்து 11 சவரன்
நகையை பறிமுதல் செய்தனர் . அதைத் தொடர்ந்து அவர் அரக்கோணம் குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி வேலூர் ஆண்கள் சிறையில் அடைத்தனர்.
சென்னையிலிருந்து புறநகரங்களுக்கு
இயக்கப்படும் சில ரயில்களில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளது. அனைத்து ரயில்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டால்
ரயில் பயணிகள் திருட்டு பயம் இல்லாமல் பயணிக்கலாம் என்று அனைத்து தரப்பினரும்
தெரிவிக்கின்றனர்.
இப்போது புதியதாக தயாரிக்கப்பட்ட
ரயில் பெட்டிகளில் மட்டுமே சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இருப்பது
குறிப்பிடத்தக்கது.