திருவள்ளுர் அடுத்த காக்களூர், பூந்தோட்டம் தெருவில் உள்ள 50
குடியிருப்புகளை கழிவுநீர் கலந்த மழை நீர் முழங்கால் அளவில் சூழ்ந்து
இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல்
பாதிப்படைந்துள்ளனர்.
திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூந்தோட்டம் மற்றும் சாய்நகர் பகுதிகளில்
45 ஆண்டுகள் மேலாக 100 க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 500
மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த குடியிருப்பு பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும்
கனமழையின் காரணமாக சுற்றியுள்ள குடியிருப்புகளில் இருந்து
வெளியேறும் கழிவுநீர் தாழ்வான பகுதியில் உள்ள சுமார் 50
குடியிருப்புகளை சுற்றி பாசி படர்ந்த கழிவு நீருடன் மழை நீர் சூழ்ந்து
இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் அவதிக்கு
உள்ளாகியுள்ளனர்.
மழை நீர் சூழ்ந்து இருப்பதால் பால் பாக்கெட் மற்றும் அத்தியாவாசிய
பொருட்கள் வாங்குவதற்கு கூட வெளியே வர முடியாமல் அவர்கள்
தவித்து வருகின்றனர். கடந்த 4 மாதமாக தேங்கி நிற்கும் கழிவுநீரால்
நிலத்தடி நீரும் அசுத்தம் அடைந்து இருப்பதால் மக்கள் குடிப்பதற்கு
தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
இதனால் அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவது மற்றும் இன்றி இரவு
நேரங்களில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகி இருப்பதால் டெங்கு
மலேரியா என காய்ச்சலுக்கு மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.
அந்த பகுதிகளில் மழை நீர் கால்வாய் முழுமை பெறாமல் பாதியில்
விடப்பட்டு இருப்பதாலும், சாலை வசதி ஏற்படுத்தாதால் இத்தகைய
பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு வருடமும் பருவ மழை காலங்களில் இத்தகைய நிலை ஏற்பட்டு
வருவதால் முறையாக அரசு மழைநீர் கால்வாய், சாலை அமைத்து தர
வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.